விமான விபத்து
1 சனிக்கிழமை காலை மங்களாபுரம் விடியவில்லையே
மனிதகுலம் துபாயிலிருந்து வந்து சேரவில்லையே
ஆகாயஊர்தி அவர்களை அழித்து விட்டதே
சோகமான முடிவையடையவா அவர்கள் ஊர்தியேறினார்

2 உங்கள் விமானம் சற்றுநேரத்தில் தரையிறங்குமென்றார்
தங்கள் கனவுகளுடன் இன்று என்னவேலை யென்றெண்ணினர்
வேலவன் தங்களை அழைக்கப்போகிறேன் என்று கூறினாரோ
காலவன் அவர்களை கணநேரத்தில் எரித்தேகினானே

3 இறந்த மூதாட்டியின் துக்கத்தை விசாரிக்க வந்தனராம்
ஒன்றல்ல இரண்டல்ல பதினேழுபேராம் ஒரேகுடும்பத்தில்
அரேபிய மண்ணிலிருந்து துபாய்மூலமாக வந்தவர்கள்
மங்களுரையே அடையவில்லை எப்படி கேரளம் போவார்கள்

4 முதல்நாள்தான் எனது நண்பர்கள் மஸ்கட் வந்தனர்
திருவனந்தபுரத்தில் வேற்று விமானத்தில் ஏற்றி அனுப்பினராம்
அந்த விமானம்தான் துபாய்சென்று மங்களுர் சென்றதா
கனிஷ்காவிமானத்தில் நான்வந்ததுபோல் இவர்களும் வந்தனரா

5 பாவம் அந்த விமானஓட்டி எவ்வளவு கடினப்பட்டிருப்பார்
அய்யோ இந்த விமானம் தறிகெட்டு ஓடுகிறதே என்று
எப்படியாவது நின்றுவிடாதா என்று ஏக்கப்பட்டிருப்பார்
இவ்வளவு மனஉளைச்சலில் அவரெப்படி வெளியே பேசமுடியும்

6 கெட்டகனவென்று மறக்கலாமென்றால் என்உள்ளம் விடவில்லை
சட்டென்று மனத்திலிருந்து இதையழிக்க முடியவில்லை
நாங்ளும் அடிக்கடி பாரதம் செல்கிறோமே விடுமுறைகளில்
பங்கமில்லாமல் போய்ச்சேர வேண்டும் என்று கவலையிராதா

7 ஃபரூக்கென்ற பயணியும் இன்னொரு பயணியும்
சுருக்கென்று முடிவெடுத்து வெளியில் குதித்துவிட்டனர்
எங்கிருந்து வந்ததோ அவர்களுக்கு இந்த எண்ணம்
அல்லாகரீம் என்று கூறுவது இவைகளுக்கு பொருந்துமா

8 நான் ஒருமுறை கவிதை எழுதினேன் இப்படியாக
நாளைக் கதிரவனை பாராமலே போனவர்கள் பலரே
உனக்கு வந்த நாளைப்பொழுதை மனங்கலங்காமலே
விருப்புடன் பணிசெய்து பலனடைய பலரைவேண்டினேனே

9 மாயமான வாழ்வு நீர்க்குமிழிக்கு ஒப்பானதே
நேயத்துடன் நேசிப்போம் மனிதஇனத்தையே
யாவரும் சகோதரர் சகோதரி என்று எண்ணிவிட்டால்
இதுவரை வாழ்ந்ததற்கு நன்றியுடன் எல்லோரும் மறைந்திருப்பர்

10 எவ்வளவு மனக்கஷ்டம் எவ்வளவு மனக்கிலேசங்கள்
உறவினர்கள் சொந்த பந்தங்களைப் பொறுக்கினார்களா
என்ன இருக்கிறது அங்கு தேடியெடுப்பதற்கு
எல்லாம் மனித மரக்கட்டைகளே மரபணு செய்துபார்ப்பராம்

11 கும்பகோணத்தில் குழந்தைகள் எரிந்து போனார்கள்
தஞ்சைப் பெரியகோயிலில் பெரியவர்கள் இறந்துபோனார்கள்
மங்களுர் விமானவிபத்தில் எல்லோரும் எரிந்து போனார்கள்
அக்கினிக் கடவுளே சுனாமி போல் நீ அடிக்கடி வருவாயா

12 மனித வாழ்க்கையென்றால் இறப்பு கண்டிப்பாக வந்துவிடும்
புனிதப் பயணம்தான் மனிதவாழ்க்கை ஆயினும் சபலங்கள்
திரைகடல் ஓடித்திரவியம் தேடுகிறான் பயணத்தை விரைவாக்கிறான்
விமானப்பயணம் சிலசமங்களில் கணத்திலே முடித்துவிடுமே

13 புவியியல் படிப்பிலே எவ்வளவு ஆராய்ச்சிகள் நடக்கும்
ஆனாலும் இதுவரை ஓடும்பொருளை கணத்தில் நிறுத்த இயலுமோ
நிறுத்தமுடிவது மனித உயிர்தான் என்று கருதிதானோ
எல்லோரும் ஆக்குவதைவிட அழிப்பதை செய்கிறார்கள்

14 ஒருவர் விளையாட்டாக கேட்டார் உடனே நிறுத்த இயலாவிடில்
விமானஓட்டி திரும்ப வேகமாக ஓட்டிக் கிளம்பிடமுடியாதா
விமானம் திரும்பப் பறந்திருந்தால் அழிவைத் தடுத்திருக்கலாம்
விமானத்தில் இதுபோன்று முடியாவிடினும் அவரன்பை வியந்தேன்

15 ஐம்பது வருடங்களில் இதுவரை பரதக் கண்டத்திலே
பத்து விபத்துகள்தான் மொத்தம் ஆகியிருக்கின்றன
அதிலும் ஓடுபாதையில் மூன்றுதான் நடந்திட்டதாம்
மைக்ரோப்ராசஸர் காலத்திலும் காலன் முந்திவிடுகிறான்

16 மழையிருக்கும் காலைவேளையில் மழைபெய்யவில்லை விதியா
பிழையிருக்கும் விமானியிடம் என்றால் அது இல்லை விதிதானா
ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் என்றால் யாருடைய ஊழது
தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன் கடவுளே இனியிது வேண்டாம்

17 கடீலுதுர்காபரமேஸ்வரியே உனது கோயிலருகில் நடந்ததே
அம்மனவரே நீதான் அந்தக் குடும்பங்களுக்கு ஆறுதளிப்பாய்
சிலதினங்கள் முன்தானே மங்களூர் வெளிநாட்டு விமானத்தளமானது
அரசுதான் ஆராயவேண்டும் மூலகாரணத்தை அறியவேண்டும்

18 கோடியான இழப்புகள் பாரதத்தில் மங்களூரில் நடந்ததே
குடும்பங்களின் இழப்புகளினும் பொருட்சேதம் பெரிதல்லவே
எனது மனஉளைச்சலை இதன்மூலம் வெளியிட்டுவிட்டேன்
மறைந்த உள்ளங்களுக்கு நான் சாந்தி வேண்டுகிறேன்