Index

  • நின்னைச் சரணடைந்தேன்
  • விட்டு விடுதலை யாகி
  • மனதி லுறுதி வேண்டும்

    1. எனக்குப் பிடித்த பாரதியின் பாடல்கள்
    நின்னைச் சரணடைந்தேன்

    நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
    நின்னைச் சரணடைந்தேன்

       பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
       என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

       மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
       குடிமை புகுந்தன கொன்றனை போக்கென்று

       தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
       நன்செயல் செய்து நிறைவு பெறும்வணம்

       துன்ப மினியில்லை சோர்வில்லை, தோற்பில்லை
       அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட

       நல்லது தீயது நாமறியோம், அன்னை
       நல்லது நாட்டுக தீயது ஓட்டுக

    விட்டு விடுதலை யாகி

    விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
    சிட்டுக் குருவியைப் போலே

    எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
    ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
    மட்டுப் படாதிங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
    வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)

    பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
    பீடையில்லத தொர் கூடு கட்டிக்கொண்டு
    முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
    முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)

    முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
    முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
    மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
    வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)

    மனதி லுறுதி வேண்டும்

    மனதி லுறுதி வேண்டும்
    வாக்கினி லேயினிமை வேண்டும்
    நினைவு நல்லது வேண்டும்
    நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

    கனவு மெய்ப்பட வேண்டும்
    கைவசமாவது விரைவில் வேண்டும்
    தனமும் இன்பமும் வேண்டும்
    தரணியிலே பெருமை வேண்டும்

    கண் திறந்திட வேண்டும்
    காடியத்தி லுறுதி வேண்டும்
    பெண் விடுதலை வேண்டும்
    பெரிய கடவுள் காக்க வேண்டும்

    மண் பயனுற வேண்டும்
    வானகமிங்கு தென்பட வேண்டும்
    உண்மை நின்றிட வேண்டும்
    ஓம் ஓம் ஓம் ஓம்