நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா
1 | புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்தஅவை | மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணும்கால் ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும் தீதொழிய நன்மை செயல்
2 | சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் | நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி
3 | இடும்பைக்கு இடும்பை இயல்புடம்பு இதுஅன்றே | இடும்பொய்யை மெய்யென்று இராதே - இடும்கடுக உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு
4 | எண்ணி ஒருகருமம் யார்க்கும் செய்ய ஒண்ணா(து) | புண்ணியம் வந்தெய்த போதலால் - கண்ணில்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு
5 | வருந்தி அழைத்தாலும் வாராத வாரா | பொருந்துவன போமினென்றால் போகா - இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில்
6 | உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர்சுகம் | கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடல்ஓடி மீண்டு கரையேறி னால்என் உடலோடு வாழும் உயிர்க்கு
7 | எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு | பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை - நல்லோர் அறிந்திருப்பர் ஆதலினால் ஆம்கமல நீர்போல் பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு
8 | ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ் | கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணும் தனம்
9 | ஆற்றுப்பெருக்கு அற்றடிசுடும் அந்நாளும் அவ்வாறு | ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லைஎன மாட்டார் இசைந்து
10 | ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் | மாண்டார் வருவாரோ மாநிலத்தீர் - வேண்டாம் நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்குஎன் என்றிட்டுண்(டு) இரும்
11 | ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் | இருநாளுக்(கு) ஏல்என்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது
12 | ஆற்றங் கரையின் மரமும் அரசறிய | வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு
13 | ஆவாரை யாரே அழிப்பார் அன்றிச் | சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்அம் புவியதன் மேல்
14 | பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால் | இச்சை பலசொல்லி இடித்துண்கை - சீச்சி வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர்விடுகை சால உறும்
15 | சிவாய நமஎன்று சிந்தித்து இருப்போர்க்கு | அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் இல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும்
16 | தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால் | கண்நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி
17 | செய்த தீவினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் | எய்த வருமோ இருநிதியம் - வையத்து அறும்பாவம் என்னறிந்து அன்று இடார்க்(கு) இன்று வெறும்பானை பொங்குமோ மேல்
18 | பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் | உற்றார் உகந்தார் எனவேட்டார் - மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே சரணம் கொடுத்தாலும் தரம்
19 | சேவித்தும் சென்றிரந்தும் தெண்நீர்க்கடல் கடந்தும் | பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்போம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம்
20 | அம்மிதுணை யாகஆறு இழிந்தவாறு ஒக்கும் | கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வறுமைக்கு வித்தாய் விடும்
21 | நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும் | பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சகமில் லார்க்கென்றும் தரும்சிவந்த தாமரையாள் தான்
22 | பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் | கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு) ஆவிதான் போயின் பின்புயாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் ப்ணம்
23 | வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே | பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் கொன்னார் மனை
24 | நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் | ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறுஇல் உடன்பிறப்பு இல்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி இல்லா மனை
25 | ஆன முதலில் அதிகம் செலவானால் | மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
26 | மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை | தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம்
27 | ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்(டு) ஒன்றாகும் | அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்
28 | உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் | எண்பது கோடிநினைத்(து) எண்ணுவன - கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான்
29 | மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி | இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர்
30 | தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார் | பூந்தாமரை யோன்பொறி வழியே - வேந்தே ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி
31 | இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும் | ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடா நோய் பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி
32 | ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம் | மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து
33 | வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் | பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்கு விடாப்பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்
34 | கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்(று) உண்டாயின் | எல்லாரும் சென்றங்(கு) எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்(று)ஈன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லா(து) அவன்வாயிற் சொல்
35 | பூவாதே காய்க்கும் மரமுமுள் மக்களுளும் | ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு
36 | நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில் | கொண்டகரு அழிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீஇ போதம் தன்ம்கல்வி பொன்றவரும் காலம் அயல் மாதர்மேல் வைப்பார் மனம்
37 | வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் | அனைத்தாய் நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய் விண்ணுறுவாக்(கு) இல்லை விதி
38 | நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் | அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாம் தத்துவமா சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள்
39 | முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளை | தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு
40 | தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் | மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலம் சொல்லும் ஒருவா சகமென்று உணர்
|
---|